பேரருள் தரும் அழகிய சதுரகிரி அனுபவப் பதிவுகள் பகுதி 1 – ஒரு புத்தகம்… ஒரு அழைப்பு… ஒரு பயணத்தின் தொடக்கம்
பேரருள் தரும் அழகிய சதுரகிரி
அனுபவப் பதிவுகள்
பகுதி 1 – ஒரு புத்தகம்… ஒரு அழைப்பு… ஒரு பயணத்தின் தொடக்கம்
கடந்த 2020ஆம் ஆண்டு, நான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பழைய புத்தகங்கள் விற்கும் இடத்திற்கு சென்றேன். அப்போது பல புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்று, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் எழுதிய “சொர்ண ரகசியம்” என்ற நாவல்.
அந்த புத்தகத்தை வாங்கியபோதும், அதை உடனே படிக்கவில்லை. வாங்கிய பல புத்தகங்களுடன் சேர்த்து, இரண்டு ஆண்டுகள் படிக்காமல் வைத்திருந்தேன்.
ஒருநாள் எதேச்சையாக, இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது தான் “சொர்ண ரகசியம்”.
அதன் முதல் பக்கத்தைப் படிக்கத் தொடங்கியவுடன், “இது நமக்காகவே வந்த புத்தகம்” என்ற ஒரு ஆழ்ந்த உணர்வு எனக்குள் தோன்றியது.
அந்த உணர்வோடு, ஒரே மூச்சில் அந்த முழு புத்தகத்தையும் படித்து முடித்தேன்.
ஆஹா! என்ன ஒரு அற்புதமான எழுத்து!
சதுரகிரியைச் சுற்றிய பல ஆன்மீக அம்சங்களை இணைத்து, ஒரு அதிசயமான கதையை எழுதியிருந்தார் இந்திரா சௌந்தரராஜன்.
அந்த புத்தகத்தை முடித்த அடுத்த கணமே, என் மனதில் ஒரு தீவிரமான ஆசை உருவானது —
“நாம் சதுரகிரிக்கு செல்ல வேண்டும்!”
அந்த எண்ணம் வந்தவுடன், உடனே சதுரகிரி மலைக்கு எப்படி செல்லலாம் என்று ஆராய ஆரம்பித்தேன்.
பேஸ்புக்கில் உள்ள சதுரகிரி தொடர்பான பல குழுக்களைப் பார்த்தேன். அங்கே இருந்தவர்களின் தொடர்பு எண்களை எடுத்து, அவர்களிடம் நேரடியாக பேசி பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
சென்னையிலிருந்து எப்படி செல்ல வேண்டும்?
எந்த பேருந்தில் ஏற வேண்டும்?
எங்கே இறங்க வேண்டும்?
அங்கே உணவு கிடைக்குமா?
இரவு தங்க வசதி உள்ளதா?
இவ்வாறான பல தகவல்கள் எனக்கு கிடைத்தன.
அதன் பிறகு, யோசிக்காமல் மறுநாள் இரவே நான் சதுரகிரிக்குப் பயணம் தொடங்கினேன்.
என்னுடன் யாரும் இல்லை. தனியாகவே பயணம்.
அங்கே என்ன செய்யப் போகிறேன் என்ற சிறிய குழப்பம் இருந்தாலும், மனம் முழுவதும் சிவபெருமானை நினைத்துக் கொண்டு பயணம் தொடர்ந்தது.
மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன…
சதுரகிரி எப்படி இருக்கும்?
புத்தகத்தில் கூறிய அதிசயங்கள் உண்மையிலேயே நடக்குமா?
சித்தர்கள் நமக்கும் காட்சி தருவார்களா?
இப்படி பல எண்ணங்கள், கற்பனைகள், ஆவல்களுடன் என் பயணம் நகர்ந்தது.
இன்று, இந்த பதிவை எழுதும் நேரத்தில், நான் நான்கு முறை சதுரகிரி பயணம் செய்து முடித்துள்ளேன்.
அதில் முதல் மூன்று பயணங்களும் வெவ்வேறு வழிகளில் சென்று அற்புதமான அனுபவங்களை அளித்தன. ஒவ்வொரு பயணமும் தனித்தனி அற்புதங்களை தந்தன.
சதுரகிரி மலைக்கு நான் சென்ற அனுபவங்கள், அங்கே நான் கண்ட அதிசயங்கள், இறைவன் எனக்கு எவ்வாறு காட்சி அளித்தார், சித்தர்கள் என்ன செய்தார்கள் — இவ்வனைத்தும் இந்த தொடரில் வரிசையாக இடம்பெறும்.
🙏 தொடர்ந்து படியுங்கள்…
நமது Shiva Vishnu TV பக்கத்தை பின்தொடருங்கள்.
நான் கண்ட அற்புதங்களையும், நான் பெற்ற ஆன்மிக அனுபவங்களையும் இனி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்…
தொடரும்...
S.S.ராமச்சந்திரன்
Shiva Vishnu Tv
Comments
Post a Comment