63 நாயன்மார்கள் வரலாறு - 2 திருநீலகண்ட நாயனார் / 63 nayanmars History - thiruneelagandar nayanar





63 நாயன்மார்கள் வரிசையில் அடுத்ததாக நாம் பார்க்கப் போவது திருநீலகண்ட நாயனார். 

ஒருவர் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் அது ஒரு பிரச்சனை இல்லை அவர் ஆன்மாவும், மனதும் இறைவனை எவ்வாறு தொழுகின்றது என்பதே இங்கே முக்கியம்.. 

இறைவன் குலத்தால் ஒரு மனிதனை பார்ப்பதில்லை அவன் நடத்தையால் மட்டுமே பார்க்கிறான் அப்படி ஒரு அற்புதமான மனம் உடைய நாயனார் தான் இந்த திருநீலகண்ட நாயனார். 


மண்பாண்டங்கள் செய்து விற்பனை செய்யும் குளத்திலே பிறந்த திருநீலகண்ட நாயனார் அவர்கள்... தமது தீவிரமான பக்தியின் மூலம் எப்படி இறைவனிடம் சேர்ந்தார் என்பதே இந்த நாயன்மாரின் சுவாரசியமான கதை ஆகும். 

இறைவனை அடைவதற்கு இதுதான் ஒரே வழி என்று எவரும் குறிப்பிடவில்லை. பலரும் பல வழிமுறைகளை கூறியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எந்த வழியில் சென்றாலும் அதில் அறத்தோடும், பணிவோடும், பக்தியோடும் செல்லும்போது அந்த வழியை இறைவன் ஏற்றுக் கொள்வார் என்பதே நமக்கு பல நாயன்மார்களின் கதைகள் மூலம் உணர்த்தப்படுகிறது. 

சரி திருநீலகண்டர் நாயன்மாரின் கதைக்கு வருவோம்....

சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் தான் இந்த திருநீலகண்டர். இறைவன் ஒரு நேரத்தில் ஆலகால விஷமான விஷத்தை தான் உண்டு இந்த உலக மக்களை ரட்சித்ததை எண்ணி, எண்ணி இறைவனுக்கு எவ்வளவு ஒரு கருணை உள்ளம் என்பதை நினைத்து, நினைத்து எப்போதும் இந்த நாயனார் திருநீலகண்டம், திருநீலகண்டம் என்று சொல்லி வருவார். 

இதனால் இவரது இயற்பெயரே ஒரு கட்டத்தில் மறைந்து இவரது பெயரே திருநீலகண்டம் என்று அழைக்கப்பட்டது. 

இவரது வேலை மண்பாண்டங்கள் செய்து விற்பனை செய்வது இவரது சிவபக்தி, சிவத்தொண்டு என்னவென்றால் எந்த ஒரு சிவனடியாரை பார்த்தாலும் அவரிடம் ஒரு அழகிய தன் கைகளால் செய்த தரமான மண்ணால் ஆன திரு ஓட்டை செய்து கொடுத்து தனது சிவதொண்டை ஆற்றி வந்தார். 

இவருக்கு ஒரு அழகிய மனைவி இருந்தார் இருவரும் சேர்ந்து அழகான ஒரு தாம்பத்திய வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தனர். 

திருநீலகண்டரின் வாழ்க்கையில் சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பமானது. அதாவது அழகான இல்லறத்து இல்லத்தரசி இருக்கும் பொழுதும் அவர் பூர்வ ஜென்மாவின் கர்மாவின் வினைப்படி ஒரு விபச்சாரம் செய்யும் தாசியின் வீட்டிற்கு  ஒருமுறை சென்று  வந்தார்.

இதை அறிந்த அவரது மனைவி "தாசி வீட்டிற்கு சென்று வந்த நீங்கள் இனி என்னை தொடக்கூடாது இது திருநீலகண்ட மீது சத்தியம்" என்று சத்தியம் செய்து விட்டார். 

இதனால் மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்த திருநீலகண்டர் தான் செய்த தவறை நினைத்து நினைத்து வருந்தினார். அந்த வருத்தத்தின் முடிவாக அவர் ஒரு சத்திய பிரமாணம் செய்து கொண்டார். அதாவது இனிமேல் தன் மனைவி மட்டுமல்ல வேறு எந்த பெண்ணையும் மனதாலும், உடலாலும் நினைத்தும், தீண்டவும் கூடாது என்ற ஒரு சத்தியத்தை எடுத்துக் கொண்டார் அதன்படியே அவர் வாழ்ந்து வந்தார்.



இப்படியே காலங்கள் சென்றது திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி வயோகிதத்தையும் அடைந்தனர்.

இவர்களின் பரிசுத்தமான பக்தியை இந்த உலகிற்கு அறிவிக்க எண்ணிய இறைவன்  திருநீலகண்டரை சந்திக்க சிவனடியார் தோற்றத்தில் திருநீலகண்டர் வீட்டுக்கு வந்தார்.

சிவனடியாரை பார்த்ததும் திருநீலகண்டர் மிக உற்சாகமாக தாம் எப்பொழுதும் சிவனடியார்களுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்து அவரை வீட்டில் உள்ளே அழைத்துச் சென்று ஒரு இடத்திலே அமர வைத்து நலம் விசாரித்து ஒரு திருவோடை கொடுக்க முன் வந்தார். 

ஆனால் சிவபெருமானோ தான் வைத்திருந்த ஒரு திருவோட்டை அவரிடம் கொடுத்து "இங்கே பாருங்கள் இந்த திருவோடு சாதாரணமான திருவோடு அல்ல இது முத்து பவளம் ரத்தினங்கள், வைரங்களை விட உயர்தரமானது இது நான் பல வருடங்களாக பயன்படுத்தி வரும் அற்புதமான திருவோடு ஆகவே இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் நான் சில கோவில்களுக்கு யாத்திரை செல்ல இருக்கிறேன் யாத்திரை முடிந்து வந்து உங்களிடம் இந்த திரு ஓட்டை பெற்றுக்கொள்கிறேன் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு சிவனடியார் ரூபத்தில் இருக்கும் சிவன் சென்று விட்டார். 

காலங்கள் உருண்டோடியது...

சில காலங்கள் கழித்து சிவனடியார் ரூபத்தில் இருக்கும் சிவபெருமான் திருநீலகண்டரின் வீட்டிற்கு வந்து "அப்பா எனது திருவோடை ஒன்று உம்மிடம் கொடுத்து சென்று இருந்தேன் அல்லவா ...அந்த திருவோடை இப்பொழுது எனக்கு திருப்பி கொடு" என்று கேட்க திருநீலகண்டர் தான் வீட்டினுள் சென்று எங்கே திருவோடு வைத்தாரோ அங்கே தேடுகிறார் அங்கே திருவோடை காணவில்லை ஏனெனில் சிவபெருமான் தன் திருவிளையாடல் அந்த திருவோடை மறைத்து வடுவார்
இப்பொழுது திருநீலகண்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை வீடு முழுவதும் தேடிப் பார்த்தார் எங்கும் காணவில்லை மிகுந்த மன வருத்தத்தோடு சிவனடியாரை பார்த்து "ஐயா தாங்கள் கொடுத்த திருவோடை பத்திரமாக தான் வைத்திருந்தேன். ஆனால் அந்த திருவோடு இப்பொழுது காணவில்லை. நான் என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. ஐயா நீங்கள் கொஞ்ச கால  அவகாசம் கொடுத்தால் அற்புதமான திருவோடை உங்களுக்கு அதே போல் செய்து தருகிறேன்" என்று கெஞ்சலான குரலில் சொல்ல..

சிவனடியாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது "நான் உன்னிடம் எனது திருவோட்டை கொடுக்கும் போது என்ன கூறினேன் அது சாதாரண திருவோடு அல்ல, அது எளிதில் எங்கும் கிடைக்காது பல காலங்களாக நான் பயன்படுத்தி வந்தேன் என்றல்லவா கூறினேன்... கொடுத்த திருவோடை தொலைத்துவிட்டு அல்லது மறைத்து வைத்துவிட்டு என்னிடம் நீர் பொய் உரைக்கிறீர்கள் இதை நான் சும்மா விடமாட்டேன் இப்பொழுதே செல்கிறேன் வழக்கு மன்றத்திற்கு" என்று தில்லை வாழ் அந்தணர்கள் முன்னிலையில் வழக்கை தொடுக்கிறார்

திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி வழக்கு மன்றத்தின் முன்னே நின்று கொண்டிருக்க அனைத்தையும் விசாரித்துவிட்டு "என்னப்பா சிவனடியார் கொடுத்த திருவோடை நீங்கள் தொலைத்து விட்டீர்களானால் இனி நீங்கள் சிவனடியார் சொல்வதை கேட்க வேண்டும்" என்று வழக்கு தீர்ப்பை உரைக்கிறார்கள். 

இப்பொழுது திருநீல கண்டறும் அவரது மனைவியும் சிவனடியாரை பார்க்க...‌
சிவனடியார் உடனடியாக இவ்வாறு கூறுகிறார் "திருநீலகண்டம் நீ எனது திருவோட்டை அபகரிக்கவில்லை என்றால் உனது மகன் மீது சத்தியம் செய்து நான் உங்களது திருவோட்டை அபகரிக்கவில்லை என்று கூறு" என்கிறார்..

திருநீலகண்டர் மிகுந்த வருத்தத்துடன் தோய்வான குரலில் "ஐயா எனக்கு புத்திரர்கள் இல்லை அதனால் அவர்கள் மீது நான் சத்தியம் செய்ய இயலாது" என்று கூற உடனடியாக சிவனடியார் "அப்படி என்றால் உன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு இதோ இருக்கும் இந்த குளத்தில் இறங்கி தலைமுழுகி எழுந்து நின்று சத்தியம் செய்" என்று கூற...

உடனே திருநீலகண்டர் தான் வைத்திருந்த மூங்கில் குச்சியை ஒரு புறம் தான் பிடித்துக் கொண்டு மறுபுறம் தனது மனைவியின் கையில் கொடுத்து இருவரும் நீரில் மூழ்கப் போக... 

சற்று கோபமான சிவபெருமான் "அது என்ன இடையில் ஒரு குச்சி! குச்சியை தூக்கி போட்டுவிட்டு இருவரும் கையைப் பிடித்துக் குளத்தில் மூழ்க வேண்டும்" என்று கூற

மீண்டும் திருநீலகண்டர் தோய்வான குரலில் "ஐயா நானும் எனது மனைவியும் ஒருவரை ஒருவர் தீண்டாமல் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் என் மனைவி திருநீலகண்டம் மீது சத்தியம் செய்து இருக்கிறார் நான் அவரை தொடக்கூடாது என்று அதனால் அவ்வாறு நான் தொட இயலாது" என்று கடந்த காலத்தில் நடந்தவற்றை சபையோரிடமும், சிவனடியாரிடமும்  கூற...

இதைக் கேட்டு அங்கே இருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகின்றனர். என்னது திருநீலகண்டரும் அவரது மணைவியும் ஒருவரை ஒருவர் தொடாமல் இவ்வளவு வருடங்கள் வாழ்ந்தனரா! என்று அனைவரும்  ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டு ஆச்சரியப்பட்டு விட்டனர்.

சிவனடியார்  விடாப்பிடியாக "ஐயா திருநீலகண்டரே நீங்கள் சொல்லும் கதையை எல்லாம் எம்மால் கேட்க இயலாது நான் உறக்கக் கூறுகிறேன் நீர் உமது மனைவியின் கையைப் பிடித்து இந்த குளத்தில் மூழ்கி எழுந்து சத்தியம் செய்ய வேண்டும் விரைவில் செய்வாயாக" என்று ஆணையிட

அங்கே இருக்கும் சபையோரும் அதையே முன்மொழிய...

வேறு வழி இன்றி திருநீலகண்டர் தனது மனைவியின் கையை பற்றி கொண்டு இருவரும் குளத்தில் மூழ்கி எழுந்திருக்கிறார்கள்... 

என்ன ஆச்சரியம் திருநீலகண்டர் வேசி வீட்டிற்கு சென்று வரும்போது எப்படி இருந்தாரோ, எந்த நிலையில் இருந்தாரோ அதாவது எந்த இளமையின் தோற்றத்தில் இருந்தாரோ அதே தோற்றத்தில் அவரும், அவரது மனைவியும் அதே தோற்றத்தில் எழுந்து நிற்க சபையோர் அனைவரும் ஆச்சரியப்பட்டு சிவனடியாரை பார்க்க சிவனடியார் சட்டென்று மறைந்து விடுகிறார்.

அப்பொழுது தான் தெரிந்தது திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி மட்டுமல்லாமல் அங்கே கூடியிருந்த
 சபையோர்கள் அனைவருக்கும் இது சிவன் ஆடிய திருவிளையாடல் என்பது.

அப்பொழுது ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் பார்வதியுடன்  தோன்றிய சிவபெருமான் "திருநீலகண்டரே இவ்வுலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் ஐம்புலன்களை அடக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல! உமது மனைவி செய்த ஒரே ஒரு சத்தியத்தின் காரணமாக என் மீது கொண்ட பற்றின் காரணமாகவும் நீங்கள் இருவரும் ஐம்புலன்களை அடக்கி இவ்வளவு வருடங்கள் சிவ சேவையிலும் உங்கள் வாழ்க்கையில் நீதி மாறாமலும் வாழ்ந்து இருக்கிறீர்கள் என்பதை இந்த உலகிற்கு கூறவே இந்த திருவிளையாடலை யாம் புரிந்தோம்..

இதே உடலோடு நீங்களும் உமது மனைவியும் எம் இடம் வந்து சேர்வீர்கள்" என்று கூற அங்கிருந்து திருநீலகண்டரும் அவரது மனைவியும் சிவபெருமானும் பார்வதியும் ரிஷப வாகனமும் மறைந்தது...

இதைக் கண்ட சிதம்பரம் வாழ் மக்கள், தில்லைவாழ் அந்தணர்கள் மற்றும் சபையோர்கள் அனைவரும் வானத்தைப் பார்த்து சிவசிவ... சிவ சிவ.... சிவ சிவ சிவ என்று கோஷமிட்டனர்....


இந்தப் பதிவில் திருநீலகண்டரின் வாழ்க்கை வரலாறு பார்த்தோம். அடுத்த பதிவில் வேறொரு நாயன்மாரின் வாழ்க்கை வரலாறு பார்ப்போம். 

சிவா விஷ்ணு டிவியுடன் இணையுங்கள் இன்னும் பல்வேறு தகவல்களையும் பல்வேறு செய்திகளையும் பல்வேறு ஆன்மிக அனுபவங்களையும் உங்களிடம் கொடுக்கவே இந்த சேனல் உள்ளது தொடர்பில் இருங்கள் தொடர்ந்து ஆன்மீகத்தை பெறுங்கள்...


Read more about other saints from 63 Nayanmars series





                                                    📤 Share on WhatsApp

                                               Copyright © Shiva Vishnu TV. All rights reserved.

Comments

Popular posts from this blog

63 நாயன்மார்கள் வரலாறு – தில்லை வாழ் அந்தணர்கள் | 63 Nayanmars History – Thillai Vaazh Andhanargal

நமது பயணம் ஆரம்பம் — சிவா விஷ்ணு டிவியின் தரிசனத் திட்டங்கள்