63 நாயன்மார்கள் வரலாறு -3 இயற்பகை நாயனார் / 63 nayanmars History - iyarpagai nayanar

63 நாயன்மார்கள் வரிசையில் அடுத்ததாக நாம் பார்க்கப்போவது இயற்பகை நாயனார். 

தானதர்மம் என்றாலே நம் நினைவில் முதலில் வருவது கர்ணன். ஏனென்றால் கர்ணனை மிஞ்சிய ஒரு தானம் செய்பவர் இதுவரை பிறக்கவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அதேபோல் இந்த இயற்பகை நாயனாரும் தன்னிடம் சிவனடியார்கள் வந்து எதைக் கேட்டாலும் கொடுத்து வடும் உள்ளம் படைத்தவர். 

காவிரி பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த இயற்பெயர் நாயனார் ஒரு வியாபாரி. இயற்கையிலேயே இவர் பெரும் செல்வந்தராக இருந்தார். தன்னைத் தேடி வரும் சிவனடியார்கள் எதை கேட்டாலும் கொடுத்துவிடும் மனப்பக்குவம் பெற்று இருந்தார் அதை ஒரு சேவையாகவும் செய்து வந்தார். 

இப்படி வரும் சிவனடியார்கள் உணவு, உடை, பொருள், பணம், தங்கம், வீடு என்று பல்வேறு வகையான தானங்களை கேட்க சிறிதும் கலங்காமல் சிரித்த முகத்துடன் சிவனடியார்களுக்கு செய்வது சிவனுக்கே செய்வது என்று நினைத்து கலங்காமல் அனைத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
 

இதுபோன்று எந்த சிவனடியார் வந்து எதை கேட்டாலும் கொடுப்பதால் இயற்பகை நாயனாருக்கு வாழ தெரியவில்லை என்றும் அவர் சித்தம் கலங்கியவர் என்றும் அவர் ஒரு பைத்தியம் என்றும் இயற்பகை நாயினாரின் உறவினர்கள் சொல்லிக் கொண்டனர்.

இன்னும் ஒரு படி மேலே சென்று யார் எதைக் கேட்டாலும் ஒருவன் எப்படி கொடுக்கலாம் தனக்கென்று ஒன்று வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் கொடுத்துவிட்டால் அது இயற்கையின் நீதிக்கு பகை அதனால்தான் இவரது பெயர் இயற்பகை என்றும் கூறப்படுகிறது.

யார் என்ன சொன்னாலும் அதை தன் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் சிவத்தொண்டை சிறப்பாகவும் தன் குடும்ப வாழ்க்கையையும் சிறப்பாகவும் தன் வியாபாரத்தையும் சிறப்பாகவும் செய்து வந்தார் இயற்பகை நாயனார். 

இப்பொழுது சிவபெருமான் தனது திருவிளையாடலை தொடங்குகிறார்.. 

ஒரு அந்தணர் வேடத்தில் சிவபெருமான் தோன்றி இயற்பகை நாயனாரை சந்திக்கிறார். 

நீங்கள் செய்யும் சிவத்தொண்டை பற்றி கேள்விப்பட்டேன். நீங்கள் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவீர்கள் என்று கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தேன் அதன் காரணமாக உங்களிடம் ஒரு பொருள் கேட்கலாம் என்று வந்திருக்கிறேன் கிடைக்குமா என்றார் அந்தணர் வேடத்தில் இருக்கும் சிவபெருமான். 

அவரை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று உட்கார வைத்து உங்களுக்கு என்ன வேண்டும் பணமா? பொருளா? நகையா? வீடா? சொத்தா என்ன வேண்டும்? என்று கூறுங்கள் உங்களுக்கு எதுவாக இருந்தாலும் நான் கொடுப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்றார் இயற்பகை நாயனார்.

ஒரு நிமிடம் கண்மூடி யோசித்த அந்தணர் வேடத்தில் இருக்கும் சிவபெருமான்.. எதைக் கேட்டாலும் கொடுப்பாயா? நான் கேட்டுவிட்ட பிறகு நீ தர மறுத்தால் மிகப்பெரிய பாவத்தை அனுபவிக்க வேண்டி வரும் .. என்று கூறி ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்க... 

ஒரு நொடி கூட யோசிக்காமல் இயற் பகையை நாயனார் "ஐயா தங்களுக்கு எது வேண்டுமோ அதை கேளுங்கள் நிச்சயம் நான் கொடுப்பேன்" என்று உறுதிமொழி வழங்க..

சிவபெருமான் சிரித்துக்கொண்டே... நீ காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் உனது மனைவியை எனக்கு கொடு அதுவே நான் கேட்கும் தானம்" என்று கூறு...

சற்றும் யோசிக்காமல் இயற்பகை நாயனார் தனது மனைவியை கையைப் பிடித்து சிவபெருமான் வேடத்தில் இருக்கும் அந்தனரின் கைகளில் கொடுத்து "அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டார்.

முதலில் இயற்பகை நாயனாரின் மனைவிக்கு ஒன்றும் புரியாமல் கத்தி, அழுது, புரண்டு "நான் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க.. பிறகு வேறு வழி இல்லாமல் இயற்பகை நாயனாரின் மனைவி சிவனடியாருடன் செல்கிறார்... 

இந்த செய்தி சில நிமிடங்களில் ஊர் முழுவதும் பரவிவிட்டது. உடனடியாக ஊர்மக்கள் மற்றும் இயற்பகை நாயனாரின் உறவினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இயற்பகை நாயனாரின் மனைவி அழைத்துச் செல்லக்கூடாது என்று அந்தணர் வேடத்தில் இருக்கும் சிவபெருமாரிடம் சண்டை இடுகின்றனர்.. 

இதை கேள்விப்பட்ட இயற்பகை நாயனார் தனது வாளை எடுத்துக்கொண்டு எவரெல்லாம் அந்தணர் செல்வதற்கு தடையாக இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் தனது வாளால் வெட்டி கொல்கிறார்.

இப்படி ஊருக்கு வெளியே பாதுகாப்பாக அழைத்து சென்று ஊரின் எல்லையில் சிவனடியாரையும் தன் மனைவியையும் பார்த்து "இனிமேல் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது நிம்மதியாக அழைத்துச் செல்லுங்கள்" என்று கூற...

அந்தனர் மற்றும் இயற்பகை நாயனாரின் மனைவி முன்னே செல்ல அவர்களை திரும்பி பார்க்காமல் இயற்பகையார் தனது வீட்டை நோக்கி செல்ல... 

இயற்பகையாரே இங்கே வாருங்கள்... என்று ஒரு குரல் கேட்க... அந்த திசையை நோக்கி இயற்பகையார் திரும்பிப் பார்க்க.. அங்கே அவரது மனைவி மட்டுமே தனியாக நின்று கொண்டிருந்தார் உடன் இருந்த அந்தணர் மறைந்து விட்டார். 

அந்தக் கணம் சிவபெருமான் மற்றும் பார்வதி ரிஷப வாகனத்தில் தோன்றி... "இந்த உலகத்தில் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் நீ நம்மிடம் பக்தி கொண்டாய். உனது ஒப்பற்ற அன்பினை கண்டு மகிழ்ந்தோம். இனி நீ உன் மனைவியுடன் நம்பால் வருவாயாக" என்று இறைவன் அருள் புரிந்தார் இயற்பகை நாயனாரும் அவரது மனைவியாரும் சிவலோகம் அடைந்தார்கள். இறந்த உறவினர்கள் உயிர் பெற்று எழுந்தார்கள்.

இந்த நாயன்மாரின் கதையை படிப்பவர்களுக்கு ஒரு சங்கடம் வரலாம் என்னதான் இருந்தாலும் தன் மனைவியையே ஒருவனுக்கு தானமாக கொடுக்கலாமா? எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் மனைவியை கொடுக்க முடியுமா? இதெல்லாம் பைத்தியக்காரத்தனமாக இல்லையா? என்று கூட தோன்றலாம்... 

இதுவும் தனது இல்லை அனைத்தும் சிவனுடையது என்று எண்ணம் உள்ள எவரும் எதையும் தங்களுக்கு உரிமையாக வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையே இந்த கதையின் மூலம் நமக்கு புலப்படுகிறது. 

அப்படி அவர் அனைத்தையும் கொடுத்ததால்தான் நாயன்மார்கள் வரிசையில் மிக சிறப்பான இடத்தை அவர் பெற்றார் என்பதும் உண்மை. 

அடுத்த பதிவில் வேறொரு நாயன்மாரின் வாழ்க்கை வரலாறு பார்க்கலாம் சிவா விஷ்ணு டிவியுடன் இணையுங்கள் ஆன்மீகத்தை அனுபவியுங்கள்.


Read more about other saints from 63 Nayanmars series



                                                          

                                                               Copyright © Shiva Vishnu TV. All rights reserved.

Comments

Popular posts from this blog

63 நாயன்மார்கள் வரலாறு – தில்லை வாழ் அந்தணர்கள் | 63 Nayanmars History – Thillai Vaazh Andhanargal

நமது பயணம் ஆரம்பம் — சிவா விஷ்ணு டிவியின் தரிசனத் திட்டங்கள்

63 நாயன்மார்கள் வரலாறு - 2 திருநீலகண்ட நாயனார் / 63 nayanmars History - thiruneelagandar nayanar