63 நாயன்மார்கள்வரலாறு -5 மெய்பொருள் நாயனார்/ 63 Nayanmars History - Meipporul Nayanar


63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கும் மெய்ப்பொருள் நாயனார் வாழ்க்கை வரலாறு பார்க்கப் போகிறோம்...

இந்த மெய்ப்பொருள் நாயனார் என்பவர் சிவனடியார் வேடம் அணிந்து இருந்ததால் அவர் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார். அவர் என்ன தவறு செய்தாலும் மன்னித்துவிடுவார். அப்பேர்ப்பட்ட சிவபக்தியுடையவர் தான் இந்த மெய்ப்பொருள் நாயனார். 

எந்த தவறு செய்தாலும் மன்னிக்கலாம். ஆனால் தன்னை கத்தியால் குத்திய ஒருவனை அவன் சிவனடியார் வேடம் அணிந்து இருக்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக யாராவது மன்னிக்க முடியுமா! இவர் மன்னித்து அவனுக்கு உயிர் பிச்சை கொடுத்தது தான் இந்த நாயன்மாரின் மிகப்பெரிய சிவ பக்தி! 

சரி மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைப் பார்ப்போம்...

திருக்கோவிலூரில் மலாடர் மரபில் வாழ்ந்து வந்த அரசர் தான் இந்த மெய்ப்பொருள் நாயனார். அவர் சிவனடியார்களின் சிவ வேடத்தையே மெய்ப்பொருள் என்று கருதினார். இதனால் இவரை மக்கள் மெய்ப்பொருள் நாயனார் என்று வழங்கினார்கள். 

மெய்ப்பொருள் நாயனார் பக்தியில் மட்டும் சிறந்தவர் அல்ல வீரத்திலும் சிறந்தவர். அனைத்து போர்களிலும் அவருக்கே வெற்றி கிடைத்தது. அவரை எதிர்த்துப் போரிட்டு பல மன்னர்கள் தோல்வியுற்று ஓடினார்கள். இந்தத் தோல்வியுற்ற மன்னர்களில் முத்தநாதன் என்ற மன்னனும் ஒருவன். அவன் எப்படியாவது மெய்ப்பொருள் நாயனாரை வென்று விட வேண்டும் என்று பலமுறை போர் தொடுத்தும் அவனால் ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் தனது படைகளை இழந்து அவமானத்துடன் திரும்பிப் சென்றான்.

மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை படைபலம் கொண்டு வீழ்த்த முடியாது என்பதை முத்தநாதன் உணர்ந்து கொண்டான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார்களிடம் பெரும் அன்பு கொண்டவர் என்பதை அவன் அறிந்து கொண்டான்; வஞ்சனையுடன் பொய்த்தவ வேடம் கொண்டு வெள்ளை எண்ணினான்.

எப்படியும் மெய்ப்பொருள் நாயனாரை வீழ்த்தி விட வேண்டும் என்று இரவு பகலாக யோசித்து பிறகு  ஒரு முடிவுக்கு வந்தவன் சிவனடியார் வேடம் தரித்து அரசனைக் காண செல்லும் முயற்சியில் இறங்குகிறான்.

முத்துநாதன் சிவனடியார் வேடத்தில் மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனைக்கு செல்கிறான். மெய்ப்பொருள் நாயனார்  தனது பாதுகாவலர்களிடம் சிவனடியார்கள் யார் வந்தாலும் எந்த கேள்வியும் கேட்காமல் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டளை பிறப்பித்திருந்தார். அதன் காரணமாக சிவனடியார் யார் வந்தாலும் அவர்களை காவலர்கள் அரண்மனையின் உள்ளே  அனுமதப்பது வழக்கம். சிவனடியார் வேடத்தில் வந்த முத்தநாதனை உண்மையான சிவனடியார் என்று நினைத்துக் கொண்டு காவலர்கள் அரண்மனையில் உள்ளே அனுமதித்தார்கள். 

அப்போது அரசர் மெய்ப்பொருள் நாயனார் தனது சயன அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது அறையின் வாசலில் தத்தன் என்பவன் காவல் இருந்தான். முத்தநாதன் அங்கு சென்றான். சிவனடியார் வேஷத்தில் இருந்த முத்தநாதனை கண்டதும் தத்தன் மன்னர் உறங்கிக் கொண்டிருந்த செய்தியை அவரிடம் தெரிவித்தான்.

எங்கே தான் போட்டு வந்து இருந்த திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று சில நொடிகள் யோசித்த முத்தநாதன். பிறகு ஒரு யோசனை வந்தவனாய் காவலனை பார்த்து "நான் உங்கள் அரசனுக்கு மோட்சம் அளிக்கும் சக்தி வாய்ந்த ஒரு பொருளை கொண்டு வந்திருக்கிறேன் ஆதலால் என்னை தடுக்காதே" என்று கூறியபடியே காவலாளியை ஏறெடுத்தும் பார்க்காமல் முத்தநாதன் விறு விறு என்று மன்னர் உறங்கும் அறைக்குள் நுழைந்தான். 

அங்கே அறைக்குள் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் கட்டிலில் தூங்கிக் கொண்டிருப்பதையும், அருகில் ராணி அம்மையார்  அமர்ந்திருப்பதையும் முத்தநாதன் கண்டான்.

முத்துநாதன் பல்வேறு விதமாக யோசித்தான்... "என்னடா இது காவலனை ஒரு வழியாக சமாளித்து வந்து விட்டோம். இப்பொழுது அரசியார் இருக்கிறாரே என்ன செய்வது" என்று யோசிக்கும் பொழுதே.. முத்தநாதனை சிவனடியார் வேடத்தில் கண்ட அரசியல் ஒரு நொடி கூட யோசிக்காமல் மெய்ப்பொருள் நாயனாரை தூக்கத்திலிருந்து எழுப்பினார். 

அரசர் கண்விழித்துப் பார்க்கும் பொழுது எதிரே நின்ற சிவனடியாரை பார்த்து வணங்குகிறார். தன் எதிரே நிற்பவன் தன்னை கொள்ள வந்த விரோதி முத்தநாதன் என்று தெரியாமல் உண்மையான சிவனடியார் என்று முத்தநாதனுக்கு தகுந்த மரியாதை கொடுத்தார். அரசர் மெய்ப்பொருள் நாயனார். முத்த நாதனை பார்த்து மெய்ப்பொருள் நாயனார் "ஐயா தாங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன? என்று பணிவுடன் கேட்டார்.

முத்துநாதன் மன்னனை பார்த்து "சிவபெருமான் முன்பு அருளிய ஆகம நூல் ஒன்று உள்ளது. அது இந்த உலகில் இதுவரையில் வெளிவராதது. அதை உங்களுக்கு போதிப்பதற்காக கொண்டு வந்திருக்கிறேன்" என்றான் முத்துநாதன். 

மெய்ப்பொருள் நாயனார்க்கு
 அளவில்லாத மகிழ்ச்சி. ஏனென்றால் இதுவரை வெளிவராத ஒரு நூல் நம்மிடம் வந்திருக்கிறதே என்று ஆர்வத்துடன் "சிவபெருமான் அருளிய ஆகமத்தை வாசித்து அதற்கு பொருள் விளக்கம் தாருங்கள்" என்று பணிவுடன் கூறினார் மெய்ப்பொருள் நாயனார்.

தன் திட்டம் நிறைவேறப் போவதை எண்ணி உளமாற மகிழ்ச்சி அடைந்தான் முத்தநாதன். "அரசே இந்த அரிய ஆகம நூலை வாசிக்கும் போது அரசியார் உடன் இருக்கக் கூடாது. நாம் இருவரும் தனியாக இருக்கும் நிலையில் தான் இதை படித்து போதனை அளிக்க முடியும்." என்று முத்தநாதன் சூது வார்த்தைகளை சொன்னான்.

"அப்படியே ஆகட்டும் ஐயா" என்றபடி அரசியரை அந்த அறையில் இருந்து அந்தப்புரத்திற்கு செல்ல சொல்லி விட்டார் மெய்ப்பொருள் நாயனார்.

அரசர் முத்த நாதனை ஒரு உயர்ந்த ஆசனத்தில் அமர வைத்தார். பின்பு பயபக்தியுடன் முத்துநாதன் எதிரியை கீழே அமர்ந்து ஆகமத்தை கேட்கும் ஆர்வத்தில் மன்னர் அமர்ந்தார். 

முத்துநாதன் புத்தக பையை அவிழ்ப்பது போல சில நொடிகள் நடித்துக் கொண்டிருந்தான்... அந்த நிமிடம் மெய்ப்பொருள் நாயனார் தரையில் விழுந்து அவனை வணங்கினார். இதுதான் சமயம் என்று காத்திருந்த முத்தநாதன் புத்தகக் கட்டில் ஒளித்து வைத்திருந்த உடைவாளை எடுத்து அவரின் முதுகில் ஓங்கி குத்தினான். மெய்ப்பொருள் நாயனார் கீழே விழுந்து துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.

வெளியே நின்று இருந்த காவலனுக்கு மன்னரின் வளியில் துடிக்கும் குரல் கேட்டதும் என்ன நடக்கிறது என்று பயந்து உள்ளே ஓடி வந்தான். அங்கே கண்ட காட்சியைப் பார்த்ததும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை உடனடியாக வாளை உருவி முத்தநாதனை கொல்வதற்கு செல்ல முயல..

தரையில் உயிர் நீங்கும் நிலையிலிருந்து அரசர் மெய்ப்பொருள் நாயனார் மெல்ல தமது கையை நீட்டி, "தத்தா; இவர் நம்மவர்; இவரை ஒன்றும் செய்யாதே" என்று கூறினார். "இவர் வெளியே செல்லும்போது காவலர்களும் பிறரும் இவரை தடை செய்யாதபடி, இவரை நீ பத்திரமாக கொண்டு போய் விட்டுவிடு" என்று அவர் ஆணையிட்டார்.

வளியில் துடிக்கும் மன்னனை காப்பாற்றுவதா? அல்லது மன்னனின் ஆணையை நிறைவேற்றுவதா? என்று சில நொடிகள் யோசித்த தத்தன் வேறு வழி இன்றி மன்னரின் ஆணையை செய்து முடிக்க அந்த கொலைகார முத்தநாதனை தனுடன் அழைத்துச் சென்று அவனுக்கு ஆபத்து இல்லாத இடமாக பார்த்து விட்டுவிட்டு கண்களில் கண்ணீருடன் அரசனை காண ஓடி வந்து அரசன் முன்பு நின்றான்.

"அரசே தாங்கள் உத்தரவிட்ட வண்ணம் அந்த வேடதாரிக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாமல் அவனை பத்திரமாக கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன்" என்று நாயனாரிடம் தத்தன் பணிவுடன் தெரிவித்தான்.

அந்த சொற்களை கேட்பதற்காக உயிரை தாங்கிக் கொண்டிருந்த மெய்ப்பொருள் நாயனார் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு அவர் தனது மனைவி, இளவரசர், உறவினர் அனைவரையும் அழைத்து, நீங்கள் எல்லோரும் திருநீற்றினிடம் வைத்த அன்பை பாதுகாத்து உலகில் வாழுங்கள். என்ற அறிவுரையை வழங்கினார் பின்னர் அவர் சிவபெருமானுடைய திருவடிகளை மனதில் எண்ணி தியானித்தார்.

மன்னரின் நிலையைக் கண்டு அங்கு இருந்த அரசியார், இளவரசர் மற்றும் காவலர்கள், உறவினர்கள் அனைவரும் கண்களில் கண்ணீர் ததும்பஅழுது கொண்டிருந்தனர்.

சில நொடிகளில் இறைவன் எழுந்தருளி அவருக்கு காட்சி தந்தார். மெய்ப்பொருள் நாயனார் பெறுவதற்கு அரிய இறைவன் திருவடிகளை அடைந்து உண்மையான இன்பம் பெற்றார். பகைவனுக்கு அருளுதல் என்ற தர்மத்திற்கு ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர் மெய்ப்பொருள் நாயனார் ஆவார்.

எத்தகைய கருணை? உடையவாளால் குத்திய முத்தநாதனை "நமர்" என்று மெய்ப்பொருள் நாயனார் தத்துனிடம் கூறுகின்றார். நமர் என்றால் நம்மவர், நம்மை சேர்ந்தவர் என்று பொருள். கொலை செய்த கொடியவனை இவர் நம்ம ஆள் என்று விவரிக்கிறது மெய்ப்பொருள் நாயனாரின் பெருங்கருணை

சிவா விஷ்ணு டிவியுடன் இணையுங்கள். இன்னும் பல்வேறு மகான்கள், சித்தர்கள், நாயன்மார்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.



Read more about other saints from 63 Nayanmars series





இது முக்கியமான தகவல்...



                                                             Copyright © Shiva Vishnu TV. All rights reserved.

Comments

Popular posts from this blog

63 நாயன்மார்கள் வரலாறு – தில்லை வாழ் அந்தணர்கள் | 63 Nayanmars History – Thillai Vaazh Andhanargal

நமது பயணம் ஆரம்பம் — சிவா விஷ்ணு டிவியின் தரிசனத் திட்டங்கள்

63 நாயன்மார்கள் வரலாறு - 2 திருநீலகண்ட நாயனார் / 63 nayanmars History - thiruneelagandar nayanar